Jul 4, 2013

இளைஞர் பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு நாளையும், நாளை மறுதினமும்..

-கொழும்பு செய்தியாளர்-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு நாளையும் (5) நாளை மறுதினமும் (6) மஹரகம சிறிலங்கா யூத் பிரதான மண்டபத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விசேட பாராளுமன்ற மண்டப வளாகத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் சபாநாயகர் சானக்க ஹசித் பெர்ணாந்து தலைமையில் நடைபெறும்.

இந்த அமர்வில் தேசிய இளைஞர் கொள்கை சட்டமூலம் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.

5ம் திகதி நடைபெறும் இலங்கை இளைஞர் பாராளுமன்ற அமர்வில் பிரதான உரையை மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை “எதிர்க்கட்சிகளின் பொறுப்புகள்” என்ற தலைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நிகழ்த்துவார்.


மாலை 5.30 மணியில் இருந்து 6.00 மணி வரையில் “ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் பொறுப்புகள்” என்ற தலைப்பில் சபை முதல்வரும், நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா இரண்டாவது உரையை நிகழ்த்தவுள்ளார்.
 

இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அமைச்சின் மேற்பார்வை அமைச்சர் மொஹான் லால் கிரேரு, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. திலகரத்ன, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான சட்டத்தரணி லலித் பியும் பெரேரா ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
 

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலைவர் பான் கீ மூன் அவர்களின் இளைஞர் விவகாரம் தொடர்பான பிரதிநிதி அஹமட் அல்ஹேன்தாவி இளைஞர் பாராளுமன்றத்தின் இரண்டாவது நாள் அமர்வின் பிரதான உரையை காலை 10.00 மணிக்கு நிகழ்த்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.